தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.