உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அவரது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (20) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சிமன்றங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார். நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்ததில்லை.
ஜனாதிபதியின் இந்த கூற்று முற்று முழுதாக மக்களின் வாக்குறுரிமைக்கு விடுக்கப்படும் அழுத்தமாகும். அது மாத்திரமின்றி ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற ரீதியில் 4 இலட்சம் பேருக்கும் அஸ்வெசும வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு 15 000 மேலதிக உர நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தாம் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதை அறிந்து கொண்டுள்ளதால் தான் ஜனாதிபதி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
எனவே தான் ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ளோம். ஆரம்பத்தில் ஆயுதங்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்த இவர்கள் தற்போது அச்சுறுத்தல்களாலும் அழுத்தங்களாலும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 80 சதவீதமான உள்ளுராட்சிமன்றங்களைக் கைப்பற்றும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கம் 6 மாதங்களுக்குள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 1984களில் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போதும் ஜே.வி.பி. இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்தது. எனினும் மக்கள் அதற்கு அஞ்சவில்லை. அதேபோன்று தற்போதும் அச்சமின்றி மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வர். அதனை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.