நாமலின் சட்டமாணி பட்டத்துக்கும் சிக்கல்?

நாமலின் சட்டமாணி பட்டத்துக்கும் சிக்கல்?

editor 2

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சைக்கு தோற்றிய விவகாரம் இன்று வரை பேசப்படுகிறது.முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சையின் போது பிரத்தியேக குளிர் அறையில் இருந்தவாறு நாமல் ராஜபக்ஷ தோற்றியதாக குறித்த நபர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடளித்ததாகவும், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்லூரியின் அதிபரிடம் குறிப்பிடுவதற்கு சென்றபோது அவர் இருக்கவில்லை என்றும் கல்லூரியின் பதிவாளருக்கு குறிப்பிட்ட போதும் அவரும் அந்த முறைப்பாட்டை கவனத்திற் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அப்போதைய நீதியமைச்சின் செயலாளர் சுஹத் கம்லத்திடம் குறிப்பிட்ட போதும் அவர் அந்த முறைப்பாட்டை எழுத்துமூலமாக பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற போது அங்கும் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

2010.12.03 ஆம் திகதியன்று பொலிஸ்மா அதிபரை சந்தித்து முறைப்பாடளிக்க முயற்சித்ததாகவும், அதுவும் பயனலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிப்பதற்கு சென்ற வேளை பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவது இயல்பானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.முறைப்பாடளிக்க முயற்சித்ததால் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தை திருடர்கள் பிடித்துக் கொண்டார்களா அல்லது திருடர்களை அரசாங்கம் பிடித்துக் கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசை அளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

Share This Article