சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தது!

சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தது!

editor 2

மிகவும் சிக்கலான மற்றும் சவாலான சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறையாண்மை பத்திர உரிமையாளர்களில் 98 சதவீதமானோர் பத்திர பரிமாற்றத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, தற்போதுள்ள பத்திரங்களுக்குப் பதிலாக புதிய பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. 

கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வ அழைப்பிதழ் வெளியிடப்பட்டதுடன், அன்றைய திகதியில் பத்திரத்தின் பெறுமதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிலுவையிலிருந்தது. 

அதன்படி, இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பத்திரதாரர்கள் புதிய பத்திரங்களுடன் தங்கள் பத்திரங்களை பரிமாற்றிக் கொள்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், அதற்கான இறுதி நாளாகக் கடந்த 12 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையின் சர்வதேச இறையாண்மைப் பத்திர கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

இரண்டு வருட நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், இலங்கை தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதேநேரம், இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிவிப்பு நாளை வெளியாகும் என நிதியமைச்சு எதிர்பார்க்கிறது.

Share This Article