மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரை!

Editor 1

கடன் நிலுவை மற்றும் அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்படக்கூடிய செலவுகளைக் கருத்திற்கொண்டே மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, வலுசக்தி அமைச்சின், மின்சக்தித்துறை மறுசீரமைப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் இதனைத் தெரிவித்துள்ளார். 

அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு தற்போதுள்ள மின்சார கட்டணத்தை அவ்வாறே பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது. 

அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 268 பில்லியன் ரூபாய் செலவுகளை ஏற்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் 229 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, செலவுகளுக்காக மேலதிகமாக 39 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. 

கடந்த காலங்களில் பெறப்பட்ட இலாபத்தில் 112 பில்லியன் ரூபாய், பெற்ற கடன் மற்றும் செலவு நிலுவைகளைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில், கடந்த காலங்களில் பெறப்பட்ட இலாபத்தில் 41 பில்லியன் ரூபாய் எஞ்சியிருக்கும். 

எனவே, அடுத்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக மேலதிகமாக தேவைப்படும் 39 பில்லியன் ரூபாவினை, குறித்த 41 பில்லியன் ரூபாவிலிருந்து செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அடுத்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சின், மின்சக்தித்துறை மறுசீரமைப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.

Share This Article