உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது!

Editor 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும்,
அது பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்ரத்நாயக்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான வரைவுச் சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமைக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்துமாறு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள்
கோரப்பட்டு, 80,670 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் வெளிநாடுகளிலும் உள்ளனர். சுமார் 2000 பேர் வேறு கட்சிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க மேலும் கூறினார்.

Share This Article