தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலை மேற்கொள்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திட்டமொன்று இருந்தது.தூரநோக்கொன்று இருந்தது. நாம் எவரையும் பழிவாங்கலுக்கு உட்படுத்தவில்லை.
எதிர்கட்சியினரை அச்சுறுத்துவதற்கோ, ஏனையவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்ப தற்காகவோ மகிந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. மாறாக நாட்டிற்காக வேலை செய்யும் நோக்கிலேயே நாம் ஆட்சிக்கு வந்தோம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பழி வாங்கலை மேற்கொள்ளும் நோக்கிலேயே ஆட்சிக்கு வந்தது. எம்மீது ஊழல் வழங்குகளை தொடுத்துசிறையில் அடைத்து பழிவாங்கலை மேற்கொண்டது.
அதேபோன்று மக்களுக்கான சேவையை மேற்கொள்வதற்காகவே கோட்டாபவின் அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தது. அதேபோன்று நாமும் வேலை செய்தோம். நாம் எந்த வேலையையும் செய்யவில்லை என எவராலும் சொல்ல முடியாது.
இருப்பினும் எம்முடைய கட்சி திட்டமிடப்பட்ட ரீதியில் வீழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொவிட் தொற்று நெருக்கடி நிலையுடன் வீழ்ச்சியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோன்று அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாக எம்முடைய அரசாங்கத்தை வீழ்த்தினர்.
இத்தகைய பின்னணியில் தற்போதைய அராசாங்கம் பழிவாங்கலை மேற்கொள்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளது. மாறாக வேலைசெய்வதற்காக இல்லை என்றே கூற முடியும்.- என்றார்.