யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் திருச்சி விமான நிலையத்துக்கும் இடையிலான விமான சேவை 47 ஆண்டுகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
திருச்சியில் இருந்து நேற்று மதியம் புறப்பட்ட விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது பெரும் வரவேற்பு அளிக்கப்பட் டது.நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு , 2. 25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு , திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்கக்கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால் , கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை உள்நாட்டு போரால் தடைப்பட்டு 47 ஆண்டுகளுக்கு பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.