இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலை தீவிரம்! மோதல் ஏற்படும் அபாயம்!

இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நிலை தீவிரம்! மோதல் ஏற்படும் அபாயம்!

editor 2

ஜம்மு கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையின் தொடராக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான முறுகல் நிலை வலுடைந்துள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தமது நாடுகளில் உள்ள மற்றைய நாட்டு மக்களை வெளியேறுமாறு காலக்கெடு விதித்துள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், துப்பாக்கிதாரிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்கள், வரும் 27ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கான மருத்துவ விசாக்கள் 29ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலம் முடிவடைவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும், விரைவில் நாடு திரும்ப வேண்டுமென கூறியுள்ளது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவில் வந்து சிகிச்சை பெற்று வருவோர், அவர்களுடன் தங்கி இருப்பவர்கள், ஆட்டோமொபைல் தொழில் சார்ந்தவர்கள், என்ற வகையில் சுமார் 500 பேர் வரை தமிழகத்துக்கு வந்து செல்வதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இவர்களை நாளைக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார்.இதனிடையே,

இந்தியப் பாதுகாப்பு படையில் பணியாற்றும் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் படைத்தரப்பு ஒளிப்படங்கள் இரண்டை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் – புதிய தலைமுறை

Share This Article