மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்காக கர்ப்பிணித் தாய் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே நேற்று மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தபோதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், வைத்தியர்கள் இயற்கை முறையில் குழந்தை பிரசவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம்
இடம்பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்குச் சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின்
உடலைக்கூட பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண் ணின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள்,பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலைப் பணிப்பாளர்,
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை
தரவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.