இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்குரிய பயணம் தீவிரமடையும் – கஜேந்திரகுமார்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்குரிய பயணம் தீவிரமடையும் - கஜேந்திரகுமார்!

Editor 1

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம்
இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட பின்
னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்வரும் 5 வருடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆழமாக சிந்தித்து தமிழ் தேசத்தின் இன அழிப்பினுடைய, அடையாளமாக இருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் மண்ணில் எங்களுடைய உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சத்தியப் பிரமாணம் எடுக்கின்ற நோக்கத்தோடு வந்திருக்கின்றோம்.

இன்று தென்னிலங்கையில் ஒரு மாற்றம் நடைபெற்று இருக்கின்ற சூழலில் விசேடமாக வடக்கு – கிழக்கில் அதிலும் யாழ்ப்பாணத்தில் தென் இலங்கையில் நடைபெற்ற மாற்றத்தை போன்று ஒரு மாற்றம் நடைபெற்றதாகக் கூறி தமிழ்
மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற கருத்தை கூட கூறுகின்ற அளவுக்கு ஆட்சியாளர்கள் உள்ளனர்.

எமது மக்களை அரசியல் மயமாக்கி ஆட்சியை ஏற்றுக்கொண்டதாக காட்ட விரும்புகின்ற முயற்சியை மிகப்பெரியளவில் தோற்கடித்து தமிழ் மக்களுடைய
உண்மையான தேசப்பற்றுடைய -தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய தேச அங்கீகாரத்துடன் சுயநிர்ணய சமஷ்டி தீர்வை நோக்கி மட்டுமே நாங்கள் நகர முடியும் என்ற செய்தியை உலகத்துக்கு காட்டக்கூடிய வகையில் எங்களது இயக்கம் மிக தீவிரமான வகையில் இனிவரும் காலங்களில் இயங்கும்.

கடந்த 15 வருடமாக எங்கள் கொள்கைகளையும், மக்களுடைய அபிலாஷைகளையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்திருக்கின்றோம். நாங்கள் மக்களோடு தோள் நின்று அவர்களுடைய அன்றாட பிரச்னைகளாக இருக்கலாம், அவர்களுக்கு இருக்கக்கூடிய அடக்குமுறையாக இருக்கலாம் அனைத்துக்கும் எதிராக போராடி இருக்கின்றோம். அதனையும் தாண்டி இன்று இருக்கக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து எமது இயக்கத்தின் செயற்பாடுகள் இதுவரை காணாத அளவுக்கு பலப்படுத்த வேண்டும் நமது முயற்சிகளை மூன்று, நான்கு மடங்காக பெருப்பிக்க வேண்டும் அதைச் செய்வதன் ஊடாக மட்டுமே நாங்கள் தெற்கில் இருக்கக்கூடிய இனவாத சக்திகளுடைய இந்த நோக்கத்தை தோற்கடிக்கக்கூடியதாக இருக்கும்.

அத்தோடு கடந்த 15 வருடங்களாக எமது அரசியல் இயக்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய தமிழின படுகொலைக்கு, ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஐ.நா மனித உரிமை பேரவையிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடைய பலவீனங்களை நாங்கள் மக்களுக்கும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துக்காட்டி இருக்கின்றோம்.

அதனுடைய இயலாமையை நாங்கள் கடந்த 15 வருடங்களாக அனுபவித்து வந்திருக்கின்றோம்.

நாங்கள் தொடர்ந்து எங்களுடைய மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அதே சமயம் மக்களுடைய முழு பலத்தையும் அணி திரட்டி ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதற்கு விசேடமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம்அடையும் – என்றார்.

Share This Article