தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளதுடன், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.