அறுகம்குடா தாக்குதல் சதித் திட்டத்தின் பின்னணியில் ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது என்றும் தாக்குதல் திட்டம் குறித்த தகவலை இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் முதலில் அறிந்து தெரிவித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அறுகம்குடாவில் கடந்த 24ஆம் திகதி தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மொசாட் புலனாய்வு அமைப்பு கண்டறிந்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எவ்.பி. ஐக்கு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்தே அறுகம்குடாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதலின் இலக்கு இஸ்ரேலிய பிரஜைகளே என்றும் இஸ்ரேல் அல்லாத நாடுகளில் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்கும் நோக்கிலயே அறுகம் குடா தெரிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அறுகம்குடா தவிர, இஸ்ரேல் பிரஜைகள் அதிகளவில் பயணிக்கும் எல்லே, வெலிகம பிரதேசங்களும் தாக்குதல் நடத்த இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இது தொடர்பான தகவலை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர், மொசாட் அமைப்பு எவ். பி. ஐக்கு வழங்கியதாகவும் எவ். பி. ஐ. அதனை இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.