அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே வாக்களிக்க வேண்டும் – மன்னார் ஆயர்!

அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மன்னார் ஆயர்!

editor 2

நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆயர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தகையோடு இப்போது பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலும் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும் 46 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து வகையான உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல் தான். இந்த அரசியல் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் அதன் கனதியை உணர்ந்தவர்களா? என்பது கேள்விக்குறியே. தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மற்றும் வடக்கு, கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான
எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளை என்று மில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது, என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 30 வருடஅகிம்சை போராட்டமும் 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.

இவ்வேளையில் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article