ஓய்வு என்ற வார்த்தையை எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்கிறார் அநுர!

ஓய்வு என்ற வார்த்தையை எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்கிறார் அநுர!

editor 2

இலங்கை அரசியலில் ஓய்வு என்ற வார்த்தையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளை தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளர்கள் மத்தியில்
உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், ‘முன்னாள் எம். பிக்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்கட்சி யினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே தேசிய மக்கள் அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்துள்ளது.

எதிர்க்கட்சி முகாமில் இப்போது பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டன.

எதிர்க்கட்சி முகாம் எங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களை செய்தது.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் – எரிவாயு எரிபொருளுக்கு வரிசைகள் ஏற்படும் என்றார்கள். அமெரிக்க டொலருக்கு
நிகரான ரூபாய் மதிப்பு குறையும் – சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றெல்லாம் பலவற்றை கூறினார்கள்.

ஆனால், இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்களின் கண் முன்னே சிதைந்துவிட்டன – என்றார்.

Share This Article