வட – கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் கன மழை!

வட - கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் கன மழை!

editor 2

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கன மழை கிடைக்கத் தொடங்கும். எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை இந்த மழை தொடரும் என்று புவியியல்துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று (நேற்று) இரவு அல்லது இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை அல்லது 18ஆம் திகதி அன்று தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு சாதகமாக இருப்பதனாலும் இது ஒருதீவிர தாழமுக்கமாகவே இருக்கும்.)
கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று அதிகாலை முதல் கன மழை கிடைக்கத் தொடங்கும். இடையிடையே இது இடி, மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும்.

இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்
என எதிர்பார்க்கப்படுகிறது. தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதனால் கிளைகள் முறிந்து அல்லது பாறி விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக வீதியோர மரங்கள் தொடர்பாக வீதியால் பயணிப்போர் எச்சரிக்கையாக
இருப்பது சிறந்தது.

இதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி அன்றும் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.

Share This Article