4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கும் கல்வி சீர்திருத்தம்!

4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கும் கல்வி சீர்திருத்தம்!

editor 2

எதிர்காலங்களில் 4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வயதை பூர்த்தி செய்த சிறார்களுக்கு எதிர்காலங்களில் Pre grade என்ற வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலையில் தரம் 13ல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சையை தரம் 10ல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்பதுடன், இளம் பட்டதாரிகளை உருவாக்குவது காலத்தின் அவசியமாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி காரியாலங்களின் எண்ணிக்கை நூறில் இருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலைகளை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் புதிய கல்வி சீர்த்திருத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article