ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த அரசாங்கம், கடன் மறுசீரமைப்பு திட்டத்தை மாற்றாதிருப்பதற்கு தற்போது இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடனை மீளச் செலுத்தும் முறைமையை மாற்றுவதற்கு ஒன்றரை வருடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த தேசிய மக்கள் சக்தி, ஒன்றரை நாள் நடத்திய கலந்துரையாடலில் சகல விடயங்களுக்கும் இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் போது வரி அறவிடப்படுகிறது.
அந்த அளவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.
எனினும் அந்த திருத்தம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
அதே போன்று கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தற்போதைய நிலையிலேயே தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் இணங்கியுள்ளனர்.
இது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முடியுமாயின் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு தாம் அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.