திருமலையில் தமிழரசுக்கட்சி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து போட்டி?

திருமலையில் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து போட்டி?

editor 2

பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா, பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன், சிறிதரன், குகதாசன் ஆகியோர் நேற்று மாலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து உரையாடி இருந்தார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே தக்க வைத்துக்கொள்ளும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற அடிப்படையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை முயற்சிகளை எடுத்திருந்தார்.

அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியையும் ஒன்றிணைத்து போட்டியிடச் செய்வதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை மாவட்டத்தில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் 5 ஆசனங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

எனினும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான உரையாடல்களை அடுத்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களை தம் வசம் வைத்துக்கொண்டு மூன்று ஆசனங்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனது.

அதன் அடிப்படையில் திருகோணமலையில் இரு தரப்புக்களும் இணைந்து போட்டியிடுவதில் எவ்விதமான பிரச்சினைகளும் காணப்படவில்லை. ஆனால் அம்பாறையில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வலியுறுத்துகிறது.

இந்த விடயம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உரையாடல்கள் ஊடாக அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அம்பாறை ஆசனப்பகிர்வு மற்றும் சிறு விடயம் சம்பந்தமாக தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என்று ஏகமனதாக தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article