எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஆராய்கின்றன.
குறித்த 2 மாவட்டங்களிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே இது தொடர்பான யோசனையை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.
இந்தநிலையில் நாளை மறுதினம் (04) இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் அவர்களது தீர்மானம் அறிவிக்கப்படும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.