என்னால் மாயாஜாலங்களைச் செய்யமுடியாது – புதிய ஜனாதிபதி அனுர!

என்னால் மாயாஜாலங்களைச் செய்யமுடியாது - புதிய ஜனாதிபதி அனுர!

Editor 1

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும், மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பாடுபட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (23) காலை பதவியேற்றதை அடுத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதோடு, ஜனநாயக கடமை நின்றுவிடாது. 

அது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ற போதிலும், நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த முதலில் சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்படுத்தப்பட வேண்டும். 

எனது பதவிக் காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதற்குத் தயாராக உள்ளேன். 

தேர்தலின் ஊடாக இடம்பெறும் ஆட்சி மாற்றத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் இதுவரை எதிர்க்கவில்லை. 

அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மக்களாணைக்கு மதிப்பளித்துள்ளார். 

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும், மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பாடுபடத் தயாராகவுள்ளோம். 

மக்களின் கௌரவம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப எம்மால் இயலுமான அனைத்தையும் செய்வதற்குத் தயாராக உள்ளோம். 

தற்போதைய நெருக்கடியை, அரசாங்கத்தினாலோ ஒரு கட்சியினாலோ, ஒரு நபராலோ தனியாக எதிர்கொள்ள முடியாது. என்னால் மாயாஜாலங்களைச் செய்யமுடியாது. 

நான் இந்த நாட்டில் பிறந்த சாதாரண பிரஜை. 

என்னிடம், இயலுமைகளும் உண்டு இயலாமைகளும் உண்டு. 

இயலுமைகளை ஒன்றிணைத்து, தெரிந்தவற்றைச் சேர்த்துக் கொண்டு மிகச் சிறந்த தீர்மானங்களை எடுத்து, நாட்டை வழிநடத்துவதே எனது முதன்மையான நோக்கமாகும். 

எனவே, அந்த பணிகளில் ஒரு பங்குதாரராக இருப்பதே எனது பொறுப்பாகும். 

இந்த பொறுப்பினை நிறைவேற்றப் பொதுமக்களினதும் ஏனைய துறையினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். 

தற்போதைய சவாலை எதிர்கொள்வதற்கு, எனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் சரிவர நான் நிறைவேற்றுவேன்.

அதேநேரம், இலங்கைக்குச் சர்வதேச ஆதரவுகள் அவசியமாகும். 

எனவே, உலகில் பல்வேறு அதிகாரப் போட்டிகள் இருப்பினும் ஒவ்வொரு நாடுகளுடனும் இலங்கைக்கு அனுகூலமான வகையில் பொதுக் கொள்கையுடன் நாம் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். 

நாட்டை மீட்டெடுப்பதில், கைத்தொழிலாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பாரிய பங்கு உள்ளது. 

என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வாக்களித்தவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைக்காதவர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, கடமையாற்றத் தயாராகவுள்ளேன். 

எதிர்வரும் காலங்களின் அதன் செயல் வடிவத்தினை கண்டு கொள்ளமுடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share This Article