எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தனது ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வன்னி மக்கள் மனப்பாங்கை அறிந்த நிலையிலே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், வன்னி மக்களின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
முழுநாட்டு மக்களினதும் விருப்பத்திற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற இருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் விருப்பத்தையும் இங்கு வெளியிட வேண்டும்.
மூன்று பிரதான வேட்பாளர்களில் அதி கூடிய தகைமைகளையும் ஆளுமையையும் அனுபவத்தையும் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான். அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு அரசியல் பொருளாதார ஸ்தீரத்தன்மை அவசியம். ரணில் விக்ரமசிங்க தான் நாட்டுக்கு விடிவைப் பெற்றுக் கொடுத்தார். இந்த ஸ்தீர நிலைமை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்துள்ளது.
இப்போதுள்ள சமூக நிலை தொடர வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
மரதனோட்டப் பந்தயத்தில் பாதியை கடந்து வந்துள்ள நிலையில் ஓட்டத்தை மாற்றினால் புதிதாக வரும் தலைவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட நேரிடும். எனவே, எஞ்சிய தூரத்தை ஜனாதிபதியினால் தான் இலகுவாக ஓடி முடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்
சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடல்ல. அது எம்.ஏ. சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமே. கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவிலே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த போது சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார்.
இதன் போது மன்னார் மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், யதார்த்த அரசியலை விளங்கிய அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.