இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்குள்ள அதிகாரவரம்பை மீறி இருப்பதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 57ஆம் அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது. இதன்போது இலங்கையின் காவற்துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்கின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவலை தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் சில கருத்துக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இந்த அறிக்கை இலங்கை இதுவரையில் கண்ட முன்னேற்றங்களை அங்கீகரிக்கத் தவறியுள்ளது.
அத்துடன் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாகப் பாதகமான முன்னோட்டத்தை வழங்கி இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டத் தவறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.