இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்கின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இன்று கவலை தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் பேரவையின் 57ஆம் அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கை தொடர்பான தமது வாய்மூல அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க், கடந்த காலங்களிலிருந்து இலங்கை விடுபட்டு புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இலங்கையில் நிலவுகின்ற சூழ்நிலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்தின் அவதானம் தொடர்ந்தும் தேவைப்படுகிறது.
தற்போது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது.
புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சியமைக்குமாக இருந்தால், நாட்டின் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மறுசீரமைப்பு நோக்கிய மாறுதல்களுக்கான நிலையான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் மக்களின் கருத்து, ஒழுங்கமைதல் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் போன்ற உரிமைகளை உறுதி செய்ய அதிகாரத்திலிருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் நிலைமாறு நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அனைத்து மனித உரிமைகள், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் போன்றவற்றுக்கு மதிப்பளித்து, இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான நிதி இடைவெளியை வழங்க வேண்டியது மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்குள்ள அதிகாரவரம்பை மீறி இருப்பதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.