ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச்செய்வதற்கான இறுதி முயற்சிகளிற்காகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிப்பதை இந்திய தூதரகத்தின் உயர் வட்டாரங்கள் நிராகரித்துள்ளன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறான தேவை ஏற்பட்டிருந்தால் டோவல் புதுடில்லியிலிருந்தே குறிப்பிட்ட தலைவர்களை தொடர்புகொண்டிருப்பார் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை என சிரேஸ்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்தது என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது.
அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்க விரும்பியிருந்தால் ஊடகங்களிற்கு தெரியாமல் சந்தித்திருக்கலாம்,கடந்த காலங்களில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே டோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.