மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் 2 ஆவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு முன்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ தலைமையிலான சட்டத்தரணிகள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் போது மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மேல் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 52 பேர் வரை கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழங்கு விசாரணை இடம்பெற்று நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) குறித்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை (28) குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக கொழும்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் அவருக்கு எதிராக வசனங்கள் குறித்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் உரிய முறையில் இடம் பெற்று வந்துள்ள போதும் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (29) மற்றும் இன்று வெள்ளிக்கிழமை (30) பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டோம்.
எனவே உரிய அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.