ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (05ஆம் திகதி திங்கட்கிழமை) 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 9 வேட்பாளர்களும்,வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 7 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிஷானும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்தி ரத்ன,கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன,அக்மீமன தயாரத்ன தேரர் சிறிபால அமரசிங்க,சரத் பொன்சேகா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.