நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி வசமாகிவிட்டது – சுசில் பிரேம ஜயந்த!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி வசமாகிவிட்டது - சுசில் பிரேம ஜயந்த!

editor 2

பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகிவிட்டது. பொதுஜன பெரமுனவினர் மகிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தேன் என்று ராஜபக்ஷகளின் உறவினர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யானது.

மகிந்த ராஜ பக்ஷவின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிடும் தரப்பினர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நெருக்கடியான சூழ்நிலையின் போது நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என்று பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுனவின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்
மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது கட்சியின் கொள்கைக்கு எதிரான தீர்மானமல்ல. கட்சிக்கு முன்னுரிமை வழங்குவதை விட நாட்டுக்கு
முன்னுரிமை வழங்க வேண்டும்.

பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயேச்சை வேட்பாளராகவே ரணில்
விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகி விட்டது. 2022 ஆம் ஆண்டின் சமூக கட்டமைப்பின் நிலவரத்துக்கும் தற்போதைய நிலவரத்துக்கும் இடையில் பெரும் மாற்றம் உள்ளது – என்றார்.

Share This Article