திருகோணமலை – உப்புவெளி பகுதியில் நபரொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டு கெப் வாகனம் ஒன்றினுள் வைத்து எரியூட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி அதிகாலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட பிரச்சினையே இந்தக் கொலைக்கான காரணம் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர், திருகோணமலை – எலஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய வர்த்தகர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர், எலஸ்வத்த பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் குறித்த வர்த்தகரை அவருடைய கெப் வாகனத்துடன் கடத்திச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து திருகோணமலை – மொரவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில், கொலை செய்யப்பட்டு அவர் கெப் வாகனத்தினுள் வைத்து எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீக்கிரையான கெப் வாகனத்திலிருந்து, எரியூட்டப்பட்ட நிலையில் குறித்த வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களில் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.