தமிழ் அரசு கட்சி முடக்கப்படவில்லை. கட்சியின் செயல்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயல்பட்டுக் கொண்டே இருகின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்தத் தேர்தலையும் நாம் சந்திக்க முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்.
வவுனியாவில் நடந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துகளைத் தெரிவித்துள்ள அவர்,
‘வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் தமிழ் அரசுக் கட்சி செயல்பட முடி யாமல் இருக்கின்றத – நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கின்றது – கட்சியின் சின்னத்தைப் பாவிக்க முடியாமல் இருக்கின்றது, தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள்?’ என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்துகொண்டிருக்கின்றது. இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதனை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துமாறும் என்னைப் பணித்தும் இருக்கின்றார்கள்.
கட்சி முடக்கப்படவில்லை. கட்சியின் செயல்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயல்பட்டுக் கொண்டே இருகின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்தத் தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது. ஆகவே, இதைத் தெரிந்து கொண்டே சிலர் வேண்டுமென்றே பிரசாரத்தை மேற்கொள்கின்றார்கள்.
வழக்கில் நிறுத்தப்பட்டிருப்பது கட்சியின் தெரிவுகளே. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தெரிவுகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒரு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதனுடைய பிரதிபலன் என்னவென்றால் அதற்கு முன்னிருந்த தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கட்சியின் செயல்பாட்டை முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உயிர்ப்புடன் – ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கின்றது. எதிர்வரும் எந்தத் தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயல்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் – என்றார்.