வைத்தியத்துறை மீதான தொடர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்ந்தும் வெளியிடப்பட்டுவரும் நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடக்கு மாகாண தனியார் வைத்தியத்துறையினர் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இந்த போராட்டத்தில் வடக்கில் உள்ள, பெரிய அளவிலான தனியார் வைத்தியசாலைகள் தொடக்கம் கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான தனியார் மருந்தகங்கள் வரையில் பங்கெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் பெருமளவான வைத்திய உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற சூழலில் அவசர நோயாளர்களின் உயிர்காக்கும் பணிகளை தனியார் வைத்தியசாலைகளே முன்னெடுக்கின்றன.
அதேபோல,
சேவை மனப்பான்மையில் வைத்திய அதிகாரிகள் பலர் கிராமங்களில் சிறிய வைத்திய சிகிச்சை நிலையங்களை அமைத்து குறைந்த செலவில் வைத்திய சேவைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான பல விடயங்களைக் கருத்தில் கொள்ளாது ஒட்டுமொத்த தனியார் வைத்தியத்துறையும் மோசமாக சித்தரிக்கப்படுவதாக தனியார் வைத்தியத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளதாக தனியார் வைத்தியத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த போராட்டம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகும் திகதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.