விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 5386 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 5386 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Editor 1

2024ஆம் ஆண்டுக்கான விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 5386 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 

இடை நடுவில் தடைப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அது தொடர்பில் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என விவசாய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் தயாசிறி ஜயசேகர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்காக வருடாந்தம் அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்கிறது. 18 வயதில் இருந்து 55 வயது வரையானவர்கள் அதற்கு பங்களிப்பு செய்வதுடன் அறுபது வயதுக்குப் பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

2022 டிசம்பர் மாதம் வரையில் விவசாய காப்புறுதிக்கு பங்களிப்பு செய்வோராக ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 741 பேர் தகைமை பெற்றுள்ளனர். அந்த வருடத்தில் 453 மில்லியன் ரூபா காப்புறுதியாக வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2024ஆம் ஆண்டில் 60 வயது பூர்த்தியாகும் நிலையில் காப்புறுதியை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 528 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

2024 மே மாதமளவில் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள தகுதியான 636 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். எனினும் எந்த வகையிலும் அவர்களது கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை. அவர்கள் தொடர்பான ஆவணம் உரிய பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், விரைவில் அவர்களுக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்படும். 

1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி விவசாயிகளுக்கான ஓய்வூதியம் தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளதுடன் இந்த வருடத்துக்காக 5386 மில்லியன் ரூபா அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் தொடர்ந்து விவசாயிகளுக்கான  ஓய்வூதியம் வழங்கப்படும். இடைப்பட்ட காலங்களில் நிதி ஒதுக்கீடுகளில் சில இடர்பாடுகள் காணப்பட்டன. எனினும் அதற்கான புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகள் தொடர்பில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க முடிந்துள்ளது. அந்த வகையில், ஓய்வூதியம் வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share This Article