திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்றைய தினம் (7) மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை யுவதியின் காதலன், காதலனின் தந்தை, சகோதரி, அவரது வீட்டில் வேலை செய்தவர், ஜேசிபி வாகன சாரதிகள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போடப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன.
இந்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பின்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், காதலனின் வீட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.