சாவகச்சேரி மருத்துவமனையில் தொடரும் பணிப்புறக்கணிப்பால் அங்கு விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இதேநேரம்,
இரு நாட்களாக தொடர்ந்த வேலை நிறுத்தத்தால் அந்த மருத்துவமனையை நம்பியுள்ள பொது மக்கள் பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நாளை மறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய பணிமனையில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேசமயம்,
சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார மருத்துவமனையை நம்பியுள்ள பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுறுத்தி தமக்கான சேவையை ஆரம்பிக்குமாறு கோரி நேற்று மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அங்கு வந்த பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த சாவகச்சேரி பிரதேச நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொதுமக்கள் அதிகளவில் அளித்த முறைப்பாட்டை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழு நேற்று மருத்துவமனைக்கு சென்று போராட்டம் நடத்திய மக்களையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் சந்தித்துப் பேசியது.சாவகச்சேரி மருத்துவமனையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறியமையையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் அவதானித்திருந்தனர்.
இதேநேரம், சாவகச்சேரி மருத்துவமனை விவகாரத்துக்கு தீர்வு காணும் நோக்கில் நாளை மறுநாள் திங்கட்கிழமை வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவமனையின் அபிவிருத்திக் குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடலை மனித உரிமைகள் ஆணைக்குழு
வில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி மருத்துவமனை அத்தியட்சகரை மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தனர்.
மருத்துவ அத்தியட்சகர் மனிதாபிமானமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடக்கிறார் என்றும் வாய்மொழி துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
எனினும், சுகாதார ஊழியர்கள் மருத்துவர்களின் கருத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தனர். மருத்துவமனையை சிறந்த சேவை வழங்கும்
நிறுவனமாக மாற்றுவதற்கு பொறுப்பு மருத்துவ அதிகாரி முயற்சிக்கும்போது,
அதற்கு மருத்துவர்கள் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.