தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் நேற்று புதன்கிழமை பாராளுமன்றில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சம்பந்தனின் பூதவுடல் நேற்று மதியம் வரை பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் பாராளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதேநேரம், சம்பந்தன் படித்த பாட சாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம்
சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு
கிளையினரும் அஞ்சலி செலுத்தினர்.
இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் (யாழ். மத்திய
கல்லூரி அருகில்) காலை 09 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மக்களின் அஞ்சலிக்காக சம்பந்தனின் பூதவுடல் வைக்கப்படும்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பிலிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவதுடன், இன்றையதினம் மாலையே திருகோணமலைக்கு
விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிய வருகின்றது.
இதேவேளை, இரா. சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கிளிநொச்சியிலுள்ள தமிழ் அரசுகட்சியின் பணிமனையில் வைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படுவதாக சி.சிறீதரன் எம். பியின் ஊடகப் பிரிவு நேற்று மாலை அறிவித்திருந்தது