பேராயரும் சில அரசியல்வாதிகளும் கொல்லாமல் கொல்கின்றனர் – மைத்திரி கவலை!

பேராயரும் சில அரசியல்வாதிகளும் கொல்லாமல் கொல்கின்றனர் - மைத்திரி கவலை!

editor 2

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சில அரசியல்வாதிகள் இணைந்து என்னை கொல்லாமல் கொல்கின்றனர்- இவ்வாறு மனம் வருந்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அத்துடன், நான் குண்டுத் தாக்குதல் நடத்தினேனா? ஆயுதங்களை தயாரித்தேனா? வெடிமருந்துகள் உற்பத்தி செய்தேனா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஈஸ்டர் தினத்தன்று குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்ற
குற்றச்சாட்டில் கைதாகி சிறையிலுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்பில்
எவரும் பேசுவதில்லை என்றும் நான்தான் அனைவருக்கும் பிரச்னையாக உள்ளேன் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல் மூடர்களின் விளையாட்டுகள் இன்னும் இரண்டே மாதங்களில் முடிவடையும். ஜனாதிபதித் தேர்தலில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ஷவை களமிறக்கி வெற்றி வாகை சூடுவோம்.

கண்டியில் நேற்று திங்கட்கிழமை சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கட்சி தலைவராக செயல்படுவதற்கே நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மாறாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்ல. எனவே,
நாம் எமது வழமையான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் சிக்கல் இல்லை. சில அரசியல் மூடர்களின் விளையாட்டுகள் இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவடையும்.

அதன் பின்னர் அவர்கள் எங்கு ஓட்டமெடுப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் யாருடைய வாயையும் எம்மால் மூட முடியாது. கட்சி யாப்புக்கு அமைய தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுபவர்களுக்கு சுதந்திரக் கட்சியில் எந்த உரிமையும் கிடையாது. எமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை.

தடையுத்தரவும் இடைக்கால தடை உத்தரவும் மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களும் மக்கள் மத்தியில் சரியான தகவல்களை கொண்டு செல்வதில் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். யாப்புக்கு அமைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி எம்மிடமே உள்ளது என்பதை ஆதரவாளர்களிடம் கூறிக் கொள்கின்றேன் – என்றார்.

Share This Article