யாழ்ப்பாணம் பருத்திருத்துறை நீதிமன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் இருக்கை பகுதியை உடைத்து, அதனுள் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்ற பெண்ணொருவர், நீதிமன்றுக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் பகுதியில் தனது பெறுமதியான கையடக்க தொலைபேசியை வைத்து விட்டு சென்றுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது, மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டு சென்ற கையடக்க தொலைபேசியை இருக்கையை உடைத்து களவாடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கையடக்க தொலைபேசியை மந்திகை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் விற்பனை செய்ய முயன்ற வேளை திருடியவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியவேளை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினுள் கையடக்க தொலைபேசியை வைத்து பூட்டி விட்டு சென்ற நபரின் கையடக்க தொலைபேசியும் களவாடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.