இறுதிப் போர்க்காலத்தில் பேரவலத்தை எதிர்கொண்ட பெண்ணுக்கு ‘குவாங்ஜூ’ விருது!

இறுதிப் போர்க்காலத்தில் பேரவலத்தை எதிர்கொண்ட பெண்ணுக்கு 'குவாங்ஜூ' விருது!

Editor 1

தென்கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை மனித உரிமைகளுக்காக வழங்கி வரும் ‘குவாங்ஜூ’ விருது ஈழத் தமிழ் பெண்ணான சுகந்தினி மதியமுதன் தங்கராசுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுகந்தினி ‘அமரா’ அமைப்பின் மூலமாக – இலங்கையின் படைத் தரப்புகளின் அடக்குமுறை மற்றும் துன்பங்களுக்கு உள்ளான – போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகள் மற்றும் வலுவூட்டலுக்காக போராடி வருபவராவார்.

‘2009 இனப் படுகொலையில் இருந்து தப்பிய அவர் இராணுத்தின் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர். இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் – நம்பிக்கையின் அடையாளமாக அவர் நிற்கிறார் என்று தென்கொரிய மே 18 அறக்கட்டளை கூறியது.

சர்வதேச கவனமும் ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே இலங்கை படைகளால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்தக் குழு இதன்போது வலியுறுத்தியது.

தான் விடுதலை (புலிகள்) இயக்கத்தில் இணைந்ததன் நோக்கம் இரண்டு
என்று சுகந்தினி கூறியுள்ளார். ஒன்று, சிங்கள அரசின் அடக்குமுறைகளில் இருந்து தமிழர்களை விடுவிப்பது.

மற்றையது, இராணுவ எந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ் பெண்களை காப்பது. 2009 போர் முடிவடைவதற்கு முன்னர் புலிகளின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்களவு உறுதிப்படுத்தப்பட்டது – என்றும் அவர் கூறினார்.

2009 இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் இலங்கை இராணுவம் பாலியல் வன்முறை, சித்திரவதைகளை கட்டவிழ்த்தது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, சிறுவர்கள், முதியவர்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டது.

விருது நிகழ்வில், தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வவுனியா ஜோசப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பயங்கர சித்திரவதைகளை எதிர்கொண்டதை சுகந்தினி நினைவு கூர்ந்தார். இராணுவம் என்னை இடைவிடாது சித்திரவதை செய்தது. தளபதி முதல் சிப்பாய்கள் வரை என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். மாதவிடாய் நாட்களில்கூட உடையின்றி காணப்பட்டேன். ஆடைக்காக கெஞ்சியபோது, பிரபாகரனிடம் உள்ளாடைகளை கேட்குமாறு கேலி செய்தனர். எனக்கு இந்தக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதே அறையில் 11 பெண்கள் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டனர் ஏனையோர், பேசமுடியா தளவு அதிர்ச்சியடைந்திருந்தனர்.

இந்த அனுபவங்களில் இருந்து மீள பல பெண்கள் போராடி வருகின்றனர்.
சித்திரவதைகளால் பலர் மனநல பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த அனுபவங்கள்தான் பெண்களுக்கான சுதந்திரம் – அதிகாரமளித்த அனைத்து வகையான துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் நான் போராட உதவுகிறது என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.

Share This Article