சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயாராக இருக்கும்படி தம்மிக பெரேராவுக்கு அந தக் கட்சியின் அதியுச்ச அதிகாரம் படைத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
அத்துடன், அவர் உட்பட மேலும் சிலருடன் பெரமுன கட்சியின் உயர் தலைமைகள் பேச்சு நடத்தத் தயாராகி வருகின்றன. இந்தப் பேச்சு அடுத்த வாரமளவில் நடைபெறும் என்றும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப். 17 முதல் ஒக். 16 வரையான காலப்பகுதிக்குள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பிரதான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றன.
பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு வெளியான மறுநாளே தனது அதிநவீன தேர்தல் பிரசார செயலகத்தை திறந்து வைத்தது. அங்கு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பெரமுன கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ, ஜூன் 18ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பார்.
ஜூன் 16ஆம் திகதி பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று கூறியிருந்தார். இதே நேரத்தில், அவர் ரணிலுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை தெரிவிப்பார் என்று கூறியபோதும் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியூகம் வகுத்துள்ளார் என்று அறிய வருகிறது.
இதற்கு மேற்குலக சக்திகளும் ஆதரவு அளித்து வருகின்றன. அப்படி, சஜித்தும் ரணிலும் இணைந்தால் பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்த அந்தக் கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு வேட்பாளர் நிறுத்தப்பட்டால் பொதுஜன பெரமுனவின் தெரி வாக தம்மிக பெரேராவே உள்ளார் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கடந்த மே தினத்தின் போது பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் தம்மிக பெரேரா முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.