கடந்த சில நாட்களாக இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பமானது எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம். காலநிலை மாற்றத்தை தணிக்கை உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்துக்காக ஒரேயொரு பொது சட்டம் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த இலங்கை காலநிலை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இதுவரை சுற்றுச்சூழலில் மட்டுமே எங்கள் கவனம் இருந்தது. ஆனால், அதில் காலநிலை மாற்றம் வகிக்கும் முக்கிய பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காலநிலை மாற்றம் மோசமானால் முழு சுற்றுச்சூழலும் சீர்குலைந்துவிடும். எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார முறைமையில் எம்மால் முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.
மேலும் பொருளாதார மாற்றச் சட்டத்தை அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கிறோம். 2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய உமிழ்வை அடையும் இலக்கை இலங்கை அடைவதையும் இந்த பொருளாதார மாற்ற சட்டம் உறுதி செய்கிறது.
மேலும் அந்த காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இதன் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ந்து செயல்படும் அதேவேளை, காலநிலை மாற்றத்துக்கான மன்றம் அதில் உள்ளடங்கும் – என்றார்.