வித்தியா படுகொலை; மேன்முறையீட்டு வழக்குகளிலிருந்து நீதியரசர் துரைராஜா விலகினார்!

வித்தியா படுகொலை; மேன்முறையீட்டு வழக்குகளிலிருந்து நீதியரசர் துரைராஜா விலகினார்!

Editor 1

மாணவி வித்தியா படுகொலையில் குற்றவாளிகள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதியரசர்
எஸ். துரைராஜா விலகியுள்ளார்.

புங்குடுதீவில் கடந்த 2015 மே 14ஆம் திகதி சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை
செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017 செப்ரெம்பரில் ட்ரயல் அட் பார் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கியது.

தண்டனை பெற்ற சுவிஸ்குமார் உள்ளிட்ட ஐவர் மேன்முறையீடு செய்தனர். இந்த மேன்முறையீட்டை விசாரிக்க பிரதம நீதியரசரால் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதன்போது, ஐவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற் பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில்
இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இது தொடர்பான மேன்முறையீட்டு மனுக்களை ஜூலை 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்காததால் வழக்கு விசாரணை சுமார் 6 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பிரதிவாதிகள் தமது மேன் முறையீட்டில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்துக்கு முரணானது. எனவே அந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

Share This Article