திருகோணமலை மாவட்டம் – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று (27) நேரில் சென்று பார்வையிட்டார்.
அண்மைக்காலமாக இக்குளத்தின் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக வாகனங்களை பயன்படுத்தி குளத்தின் பகுதிகளை சேதப்படுத்தி, அங்கிருக்கும் நீரை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சாணக்கியனிடம் அந்த கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.
அதையடுத்து, அப்பகுதிக்கு இன்றைய தினம் நேரடி விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அங்கே கள நிலவரம் குறித்து அவதானித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக மத்திய நீர்பாசன திணைக்கள பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
மேன்காமம் குளமானது நீண்ட காலமாக காலத்துக்கு காலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குளத்தின் பெரும்பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் மேன்காமம் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
குளம் ஆக்கிரமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச மக்கள் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அப்பகுதியில் எதிர்காலத்தில் குளம் இல்லாத சூழல் ஏற்படலாம் எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை எல்லைப்படுத்தி குளத்தினை தூர்வார்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு குளத்தினை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, குளத்தை பாதுகாக்க உதவுமாறும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.