இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர். இவை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம் பெற்றன. பல சம்பவங்கள் ஒரே மாதிரி யானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேக நபர்களை பொலிஸார் கொண்டு சென்றவேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம், விசாரணையின்போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் 10 ஆம் திகதி தேசிய தொழில் பயிற்சி நிறுவகத்தின் உதவி முகாமையாளர் ஏ.ஜி.சமந்த பிரீத்தி குமார 15 கிராம் ஹெரோயினை வைத்தி ருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
தாங்கள் விசாரணை செய்த வேளை அவர் வன்முறையான விதத்தில் நடந்துகொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கினார். உடைந்த போத்தலால் தாக்கினார் என தெரிவித்துள்ள இலங்கை பொலிஸார், பொலிஸாருடனான கைகலப்பின்போது அவர் உயிரிழந்தார் என தெரிவித்தனர் எனவும் அமெரிக்கா தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது.
எனினும் மரண விசாரைணயின் போது உட்காயங்கள் காரணமாக ஏற்பட்ட குருதிப்பெருக்கே அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
ஒக்ரோபர் மாதமளவில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.