ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாக, ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினர் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தை புதன்கிழமை (24) மாலை வந்தடைந்தனர்.
ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பின், ஈரான் ஜனாதிபதிக்கு முப்படையினால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்கும் (Dr. Ebrahim Raisi) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இதன் பின்னர் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.