நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தேவாலயத்தில் இன்று காலை 8.40 க்கு விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிந்தவர்களை நினைவு கூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 8.45 முதல் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சகல தேவாலயங்களிலும் மணி ஒலிக்கவிடப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் விசேட ஆராதனை நடைபெற்றது.
இந்த ஆராதனையின் பின்னர் அருட்தந்தைமார்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினர் கலந்து கொண்ட நடைபயணம் குறித்த தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை நோக்கி ஆரம்பமானது.
இந்த நடைபயணம் இன்று காலை 7.30 அளவில் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்திருந்தது.
2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்திருந்தனர்.