சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜேதாச! கட்சி அலுவலகத்தில் பதற்றம்!

சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜேதாச! கட்சி அலுவலகத்தில் பதற்றம்!

Editor 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் குழுவொன்று தலைமையகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போதே இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு இன்றைய தினம் கோட்டேயிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடியிருந்தது.

அதன்போது, கட்சியின் நிறைவேற்றுக் குழுவினது ஏகமனதான தீர்மானத்துக்கமைய, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தொடர்ந்தும் அந்த பதவியில் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

எவ்வாறாயினும், அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் அரசியல் குழு கடந்த 8 ஆம் திகதி நியமித்தது.

இந்த நிலையில், குறித்த நியமனம் சட்டத்திற்கு விரோதமானது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்திருந்தார்.

தலைவரின் பங்கேற்பு இல்லாமல் எந்த அரசியற் குழு கூட்டத்தையும் நடத்த முடியாது எனவும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே கட்சி செயலாளர் அவ்வாறான கூட்டத்தை கூட்ட முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படும் குழுவினர் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவிரோதமான அரசியல் குழுக் கூட்டமொன்று நேற்று இடம்பெற்றதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article