வடக்கு – கிழக்கில் இன்று முதல் அதிக வெப்பம்!

வடக்கு - கிழக்கில் இன்று முதல் அதிக வெப்பம்!

editor 2

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-

கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப் பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். வடக்கு மாகாணத்தின் வவுனியா, மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்டமுறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப்பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன்குளம், மடு, கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆனாலும் இம்மழை, அதிகரிக்கும் வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை (Comfort Weather) உருவாக்கும்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும். எனவே அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article