இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுக்க வசதியாக பிரதிநிதிகள் குழு ஒன்றை அமைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு இலங்கை இணங்கியுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் புதுடில்லி சென்ற குழுவினர் இரு நாட்கள் நடத்திய சந்திப்பிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இப்போது தெரியவருகிறது.
2015ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கும் இடையில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சு ஆரம்பமானது.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான பேச்சுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் மோடி சந்திப்பின்போது மீண்டும் பேச்சு எழுந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இலங்கை – இந்திய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பேசிவருகின்றனர்.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலம் 23 கிலோ மீற்றர் நீளமானது.
இதில் வீதி மற்றும் ரயில் பாதை என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.