ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் அண்டைய நாடுகளில் ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 22ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரிடம் கடந்த 25ஆம் திகதி வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இதற்கமைய, அன்றைய தினம் வாக்குமூலம் வழங்கும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் அண்டைய நாடுகளில் ஒன்றென அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளிநாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவர் இந்த விடயத்தை தமக்கு தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது வாக்குமூலத்தின் போது அறிவித்த குறித்த நிகழ்வுடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளி காட்சிகளை பயன்படுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 4ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீதிமன்றில் முன்னிலையாகி இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.