மன்னாரில் 12 வயதான மாணவியை கடத்திச் சென்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் காலை மன்னார் நகரில் இடம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பிரபல பாடசாலையை சேர்ந்த மாணவி பேருந்தில் வந்து இறங்கி பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தச் சமயம் ஓட்டோவில் வந்த நபர், மாணவியை பாடசாலையில் இறக்கி விடுவதாகக்கூறி ஓட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார்.
சிறிது தூரம் பயணித்த ஓட்டோ ஒழுங்கை ஒன்றின் ஊடாக பயணிக்க முனைந்தது. இதையடுத்து மாணவி ஓட்டோவை நிறுத்துமாறு கத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் ஓட்டோவை வேகமாக செலுத்த முற்பட்டுள்ளார்.
அந்தச் சமயம் மாணவி ஓட்டோவிலிருந்து குதித்ததில் கையில் பலத்த அடி ஏற்பட்டு, காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிய அவர் அப்பகுதியில் நின்றவர்களிடம் கூறியுள்ளார். குறித்த ஓட்டோவை விரட்டிச் சென்றவர்கள் சந்தேகநபரை பிடித்தனர். இதன்போது, அந்த நபர் சிங்கள மொழியில் பேசியுள்ளார்.
அவரை, மன்னார் பொலிஸாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். இதேவேளை, கடந்த புதன்கிழமையும் மாணவி ஒருவரை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி ஒன்று தடுக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்தெரிவித்தன.
இதேநேரம், கடந்த 2023 நடுப்பகுதியில் சிறுவர்கள் கடத்தப்பட்ட- கடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றன. இது தொடர்பில் அரசாங்க அதிபரும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மன்னாரில் மீண்டும் சிறுவர்கள் குறிவைத்துக் கடத்தப்படுகின்றனரா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.